தமிழக பட்ஜெட்டில் பணி நிரந்தர அறிவிப்பு வெளியாகுமா? பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!
தமிழ்நாட்டில் 16 கல்வி ஆண்டுகளாகத் தற்காலிகமாகப் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குத் தீவிரமான கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு பாடங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் தங்களது நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற முதல்-அமைச்சர் விஜய்யை வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசின் வரவிருக்கும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் இது குறித்த நல்ல அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும் வாழ்க்கைக்கல்வி ஆகிய எட்டு பாடங்களில் தற்போது 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தற்காலிகமாகப் பணிபுரிந்தவர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

மேலும் தற்போதைய தொகுப்பூதிய முறையை மாற்றி முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.இதற்காகத் தேவையான நிதியை இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து உரிய அரசாணையை வெளியிட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். நீண்ட காலமாகப் பணிபுரிந்து வரும் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அரசு இந்தச் சீரிய முடிவை எடுக்கும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
