அதிகாலையில் குலுங்கிய கட்டிடங்கள்... லடாக்கில் நிலநடுக்கம் ரிக்டர் 4.1 ஆகப் பதிவு.. வீதிக்கு ஓடிய மக்கள்!

 
லடாக் நிலநடுக்கம் லடாக் நிலநடுக்கம்

பனிப்பிரதேசமான லடாக்கில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 3:54 மணியளவில், மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது லடாக்கின் லே பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலப்பரப்பிற்கு அடியில் சுமார் 150 கி.மீ ஆழத்தில் இந்த நடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.

லடாக், ஜம்மு – காஷ்மீரில்  நிலநடுக்கம்!

அதிகாலையில் திடீரென கட்டில்களும், வீட்டு உபயோகப் பொருட்களும் ஆடியதால் அதிர்ச்சியடைந்த மக்கள், "நிலநடுக்கம்.. நிலநடுக்கம்.." என அலறியபடி தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் பல மணி நேரம் சாலைகளிலேயே தஞ்சமடைந்தனர். இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள லடாக், நில அதிர்வு மண்டலத்தில் (Seismic Zone) வருவதால் அடிக்கடி இதுபோன்ற நடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம் என்றாலும், இன்றைய அதிகாலை அதிர்வு மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.

நிலநடுக்கம் லடாக்

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் எவ்வித உயிரிழப்போ அல்லது வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழும் அளவிலான சொத்து சேதங்களோ ஏற்படவில்லை என்பது பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது. "ஆழமான பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததால் பெரிய பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது" என நில அதிர்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில், இயற்கை சீற்றத்தின் காரணமாக ஏற்பட்ட இந்த நில அதிர்வு ராணுவ முகாம்களிலும் உணரப்பட்டது. தற்போதைய நிலவரப்படி நிலைமை சீராக இருந்தாலும், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.