பிரான்ஸ் நாட்டுடனான தூதரக உறவை முற்றிலுமாக முறித்தது புர்கினா பாசோ அரசு!

 
ஆப்பிரிக்கா புர்கினா பாசோ ராணுவ அரசு!

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோ, தனது முன்னாள் காலனி ஆதிக்க நாடான பிரான்ஸ் உடனான தூதரக உறவை உடனடியாக, முற்றிலுமாக முறித்துக் கொள்வதாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு அறிவித்துள்ளது. இந்த முடிவு சர்வதேச அரசியல் மற்றும் தூதரக வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

கேப்டன் இப்ராஹிம் டிராரே தலைமையிலான புர்கினா பாசோவின் ராணுவ அரசு, தேசியத் தொலைக்காட்சியில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, மற்றும் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல் போன்ற அடிப்படைத் தூதரகக் கோட்பாடுகள் பிரான்ஸ் அரசால் முழுமையாக மீறப்பட்டுள்ளன.

பிரான்ஸ் அரசு தங்களது புதிய நவதாராளவாத காலனி ஆதிக்க ஆசைகளுக்காக, புர்கினா பாசோ மற்றும் சாஹேல் பிராந்தியத்தில் வன்முறையைத் தூண்டிவிடும் பயங்கரவாத அமைப்புகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் ரகசியமாக ஆதரவு அளித்துச் சதி செய்கிறது எனப் புர்கினா பாசோவின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கில்பர்ட் ஔட்ராகோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

புர்கினா பாசோவின் இந்தத் திடீர் முடிவால் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. புர்கினா பாசோ ராணுவ அரசின் இந்த முடிவு முற்றிலும் "ஆதாரமற்ற, விரோதமான மற்றும் கவலையளிக்கும் ஒரு நடவடிக்கை" என்று பிரான்ஸ் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதற்குப் பதிலடியாக எடுக்கப்பட வேண்டிய தூதரக நடவடிக்கைகள் குறித்துப் பரிசீலித்து வருவதாகவும், புர்கினா பாசோவில் தங்கியுள்ள தங்களது நாட்டு அதிகாரிகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதால், அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும், இந்தத் தூதரக உறவு முறிவு என்பது இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான நிறுவனக் கட்டமைப்போடு மட்டுமே முடிந்து கொள்வதாகவும், பிரான்ஸ் மற்றும் புர்கினா பாசோ நாட்டு மக்களுக்கிடையேயான வரலாற்று, கலாச்சார மற்றும் சமூக உறவுகளில் இது எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் புர்கினா பாசோ அரசு தெளிவுபடுத்தியுள்ளது.  மேலும், தங்கள் நாட்டில் வசிக்கும் பிரெஞ்சு குடிமக்களின் பாதுகாப்பிற்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவப் புரட்சிக்குப் பிறகு, புர்கினா பாசோவிலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த தூதரகக் கசப்புணர்வு தற்போது முழுமையான உறவு முறிவில் வந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.