"கருகிச் சருகாகும் குறுவை நெற்பயிர்கள்" - மும்முனை மின்சாரப் பற்றாக்குறையால் விவசாயிகள் வேதனை!

 
கருகும் பயிர்கள் பயிர் கருகும் பயிர்கள் பயிர்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில் போதிய அளவில் மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால், நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்கள் கருகி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீடு செய்த தொகையைக்கூட எடுக்க முடியாமல் போகுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

ஸ்ரீமுஷ்ணம், எறும்பூர், கானூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு விவசாயக் கிராமங்களில் இந்த ஆண்டு குறுவைப் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நிலத்தடி நீரை நம்பி மோட்டார்கள் மூலம் பாசனம் செய்ய விவசாயிகள் மும்முனை மின்சாரத்தையே முழுமையாகச் சார்ந்துள்ளனர்.

ஆனால், கடந்த சில வாரங்களாக இப்பகுதிகளில் போதிய நேரத்திற்குத் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 500 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரின்றி வாடத் தொடங்கியுள்ளன.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் கூறுகையில்,  தினசரி ஒரே சீராக மின்சாரம் வழங்கப்படாமல், பல மணி நேர இடைவெளியில் பிரித்துப் பிரித்து மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் மோட்டார்களைத் தொடர்ந்து இயக்கி விளைநிலங்கள் முழுமைக்கும் பாசனம் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.

போதிய தண்ணீர் பாயாததன் காரணமாக, தற்போதே சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் இருந்த இளம்பயிர்கள் அனைத்தும் கருகிச் சருகாக மாறத் தொடங்கியுள்ளன. நெற்பயிர்களைக் காப்பாற்ற இன்னும் சில நாட்களுக்குத் தடையற்ற நீர் பாசனம் மிகவும் அவசியமாகும். எனவே, கருகி வரும் எஞ்சிய பயிர்களையாவது காப்பாற்றக் கடலூர் மாவட்ட நிர்வாகமும், மின்சார வாரியமும் உடனடியாகத் தலையிட வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனர். குறுவைச் சாகுபடிப் பணிகளுக்குத் தேவையான 8 மணி நேரத் தடையற்ற மும்முனை மின்சாரத்தை எவ்விதப் பற்றாக்குறையுமின்றி தினசரி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளின் அவசரக் கோரிக்கையாக உள்ளது.