நள்ளிரவில் கொடூர விபத்து ... பேருந்தில் தீப்பற்றி 7 பயணிகள் பரிதாபப் பலி!

 
வியட்நாம்

தெற்கு வியட்நாம் நாட்டின் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. லப் டாங் மாகாணத்தில் இருந்து ஹோ சி மின் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அந்தப் பேருந்து, நள்ளிரவில் தடுப்புச் சுவரில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பகுதியில் திடீரெனப் பிடித்த தீ, கண் இமைக்கும் நேரத்தில் வாகனம் முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. பேருந்திற்குள் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற முடியாமல் தீப்பிழம்புகளுக்குள் மாட்டிக் கொண்டு அலறியுள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் போராடித் தீயைக் கட்டுப்படுத்தியபோதிலும் 7 பயணிகள் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த 5 பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காகப் பெருநகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயின் கோரத் தாண்டவத்தால் பேருந்து முழுவதும் முற்றிலும் எறிந்து சாம்பலாகி வெறும் எலும்புக் கூடாகக் காட்சியளிக்கிறது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சிலர் தீ தீவிரமடைவதற்குள் சில பயணிகளைப் பத்திரமாக வெளியே மீட்டுள்ளனர்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தூக்கக் கலக்கமே இந்தச் சோகச் சம்பவத்திற்குக் காரணம் எனக் கண்டறிந்துள்ளனர். வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் தனக்குக் கடும் தூக்கக் கலக்கம் இருந்ததை அதிகாரிகளிடம் வாக்குமூலமாக ஒப்புக்கொண்டுள்ளார். வேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதியதால் இந்த கோர அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது விசாரணையில் உறுதியாகியுள்ளது. நள்ளிரவில் பேருந்து தீப்பற்றி 7 பேர் பலியான இந்தத் துயரச் சம்பவம் வியட்நாம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.