நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து... 21 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி!
Sep 3, 2026, 20:45 IST
மத்திய கிழக்கில் அமைந்துள்ள எகிப்து நாட்டின் தெற்கு சினாய் மாகாணத்தில் உள்ள தோடாக் - நுவைபா நெடுஞ்சாலையில் 43 பேருடன் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 22 பேர் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இப்பேருந்து தோடாக் - நுவைபா நெடுஞ்சாலையில் அல் சடா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஜோர்டான் நாட்டினர் 10 பேர் உள்பட மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்துத் தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
