பஸ் - வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 13 பேர் பலி; 22 பேர் படுகாயம்!
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. பயணிகளுடன் வந்த தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பீகாரின் கதிஹார் மாவட்டம் கெரபாரி கிராமம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள்: ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து சுமார் 40 பேர் ஒரு வேனில் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே அதிவேகமாக வந்த ஒரு தனியார் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தின் கோரத்தால் அடுத்தடுத்து வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இதில் சிக்கி நொறுங்கின.

விபத்து நடந்த இடத்திலேயே 8 பேர் உடல் சிதறி பலியானார்கள். படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.
பஸ் மற்றும் வேனில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்தில் தப்பிய பயணிகள் போலீசாரிடம் கூறும்போது, "பஸ் ஓட்டுநர் மது அருந்தியிருந்தார். வரும் வழியிலேயே ஏற்கனவே இரண்டு இடங்களில் வாகனத்தை மோதினார். அவர் குடிபோதையில் தாறுமாறாக ஓட்டியதே இந்த விபத்துக்குக் காரணம்" எனப் புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், போலீஸ் அதிகாரி சுஜீத் குமார் கூறுகையில், "பஸ் ஓட்டுநருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மது அருந்தினாரா என்பது குறித்து மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே உறுதி செய்ய முடியும். தற்போது முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்.
