ஆட்டோ மீது பேருந்து மோதி கோர விபத்து; 4 பேர் படுகாயம்!
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே தனியார் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காயல்பட்டினத்தில் இருந்து வைப்பாறு நோக்கிச் சென்ற ஆட்டோவும், அருப்புக்கோட்டையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த தனியார் பேருந்தும் தருவைகுளம் பகுதியில் எதிரெதிரே வந்தபோது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் உட்பட மொத்தம் 4 பேர் படுகாயமடைந்தனர். மோதிய வேகத்தில் இரு வாகனங்களின் முன்பக்கக் கண்ணாடிகள் முழுமையாக நொறுங்கிச் சேதமடைந்தன.
விபத்து குறித்துத் தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாகத் தருவைகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
