பேருந்தின் கண்ணாடி முன்னால் நின்றபடி பயணம் செய்தவரால் பரபரப்பு - ஓட்டுநர் சஸ்பெண்ட்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இறங்க வேண்டிய நிறுத்தத்தைத் தாண்டிச் சென்றதால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர், அரசுப் பேருந்தின் முன்பகுதியில் ஆபத்தான முறையில் நின்றபடி பயணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே உள்ள அச்சந்திரம் கிராமத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், தனது ஊரில் இறங்குவதற்காகப் பேருந்தில் பயணித்துள்ளார். ஆனால், ஓட்டுநர் அச்சந்திரம் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் 2 கிராமங்களைக் கடந்து தும்மனப்பள்ளி என்ற இடத்தில் அவரை இறக்கிவிட்டுள்ளார். இதனால் கடுப்பான அந்தப் பயணி, ஆத்திரத்தில் பேருந்து புறப்படாதவாறு அதன் முன்பக்கப் பகுதியில் ஏறி நின்று கொண்டு ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அதே நிலையிலேயே பேருந்தின் முன்னால் நின்றபடியே ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளார்.
பயணியை உரிய நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் அலட்சியமாகச் செயல்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநரின் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தினர்.
விசாரணையைத் தொடர்ந்து, பணியில் அலட்சியம் காட்டிய அந்த அரசுப் பேருந்து ஓட்டுநரைப் பணியிடை நீக்கம் (Suspension) செய்து போக்குவரத்துத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
