நடுரோட்டில் கவிழ்ந்த பேருந்து... உடல் நசுங்கி பெண் பலி; 28 பேர் படுகாயம் - கிருஷ்ணகிரியில் சோகம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தேன்கணிக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் பேருந்தின் அடியில் சிக்கி பெண் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தேன்கணிக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி ஒரு தனியார் பேருந்து வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ராயக்கோட்டை அடுத்த பகுதிக்கு வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே தறிகெட்டு ஓடி தலைகீழாகக் கவிழ்ந்தது.

பேருந்து கவிழ்ந்த சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து ராயக்கோட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், பொதுமக்களுடன் இணைந்து பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்ததில், அதன் அடியில் சிக்கிய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸார் அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பேருந்திற்குள் இருந்த பயணிகள் 28-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து காரணமாக அந்த சாலையில் தற்காலிகமாகப் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்திய போலீஸார், விபத்துக்கான காரணம் குறித்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
