மதுரை அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 5 பேர் பலி; 42 பேர் படுகாயம்!
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே இன்று அதிகாலையில் அரசுப் பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை கொட்டாம்பட்டி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அரசுப் பேருந்தும் தனியார் ஆம்னி பேருந்தும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் அதிவேகமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் இரு பேருந்துகளின் முன்பகுதிகளும் பலத்த சேதமடைந்தன. இந்த விபத்தில்பேருந்துகளில் பயணித்த 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்கள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பேருந்துகளின் இடிபாடுகளுக்குள் சிக்கிப் படுகாயமடைந்த 42 பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அவசரச் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவர்களுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
