கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள்... அமைச்சர் அறிவிப்பு!

 
கிராமம்

 

போதிய போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற, மலை மற்றும் உட்புறப் பகுதிகளில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார். பள்ளி வேலை நேரங்களுக்கு ஏற்ப இயக்கப்படவுள்ள இந்தச் சிறப்புப் பேருந்துகள் மூலம் சுமார் 140 பள்ளிகளைச் சேர்ந்த 19,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பேருந்து

போக்குவரத்து இன்றி அவதிப்பட்டு வந்த மாணவ-மாணவிகளுக்கு இந்தத் திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் கல்விப் பயணம் எளிமையாக்கப்படுவதுடன் அவர்களின் வருகையும் மேம்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பான மற்றும் நேரடிப் பயணத்தை உறுதி செய்யும் வகையில் இந்தச் சிறப்புப் பேருந்துகள் குறிப்பிட்ட வழித்தடங்களில் திட்டமிட்டபடி இயக்கப்படவுள்ளன. அரசின் இந்த புதிய அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.