போர்ஷே காரில் சிமெண்ட் கலவை தயாரித்து பெங்களூரு சாலைப் பள்ளத்தை மூடிய தொழிலதிபர்... வைரல் வீடியோ!
இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில் தீராத பிரச்சினையாக இருக்கும் சாலைப் பள்ளங்களுக்கு எதிராக, அந்நகரைச் சேர்ந்த அகில் யாதவ் என்ற இளம் தொழிலதிபர் வினோதமான முறையில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சிவப்பு நிற ‘போர்ஷே’ (Porsche) சொகுசு காரில் வந்த அவர், சாலையின் நடுவே இருந்த ஒரு பெரிய பள்ளத்திற்கு அருகே காரை நிறுத்தினார். பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில், தனது காரின் முன்பகுதியிலேயே (Bonnet) சிமெண்ட் மற்றும் மணலைக் கொட்டி, தண்ணீர் ஊற்றிக் கலக்கத் தொடங்கியதைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் வாயடைத்துப் போயினர்.
காரின் மேலேயே சிமெண்ட் கலவையைத் தயார் செய்த அவர், அதனைக் கொண்டு சாலையில் இருந்த பள்ளத்தை மூடினார். "அரசாங்கம் மட்டுமே எல்லாவற்றையும் செய்ய முடியாது, குடிமக்களாகிய நமக்கும் பொறுப்பு உள்ளது" என்ற கருத்தை வலியுறுத்தவே தான் இப்படிச் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காரில் இப்படிச் சிமெண்ட் கலந்ததைக் கண்டு கார் பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், வீடியோவின் இறுதியில் ஒரு பெரிய ‘ட்விஸ்ட்’ காத்திருந்தது.
பள்ளத்தை மூடி முடித்த பிறகு, காரின் முன்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த மெல்லிய பிளாஸ்டிக் படலத்தை ( அவர் பிரித்து எடுத்தார். சிமெண்ட் கலவையால் காரின் பெயிண்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை அவர் நிரூபித்தார். இது சாலைப் பள்ளங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவரது நிறுவனத்தின் 'பிபிஎஃப்' (PPF) தொழில்நுட்பத்தின் வலிமையைக் காட்டும் ஒரு நூதன விளம்பர உத்தியாகவும் பார்க்கப்படுகிறது. எது எப்படியோ, சொகுசு காரைச் சிமெண்ட் மிக்சராக மாற்றிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
