ஆபாச வீடியோவை காட்டி தொழிலதிபரிடம் ரூ.1 கோடி மிரட்டல்.. கான்ஸ்டபிள் உட்பட 5 பேர் கைது!
மத்திய பிரதேசத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவரை ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி, 1 கோடி ரூபாய் கேட்டு அச்சுறுத்திய வழக்கில், பெண் மற்றும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ஹிதேந்திரா சிங். ஆரம்பத்தில் மதுபான தொழில் செய்து வந்த இவர், பின்னாளில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது, நில பேரம் தொடர்பான தொழில் நிமித்தமாக ஆல்கா தீட்சித் என்ற பெண்ணுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆல்கா தீட்சித் என்பவர் லக்கன் சிங் என்ற மற்றொரு நபரை தொழிலதிபர் சிங்கிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதன் காரணமாக, இவர்கள் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர்.
நட்பு தொடர்ந்த சில நாட்களில், ஆல்கா தீட்சித் மீது ஏற்கனவே 17 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தொழிலதிபர் சிங்கிற்குத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சட்டவிரோதப் பின்னணி கொண்ட ஆல்காவுடனான நட்பு மற்றும் தொழில் தொடர்புகளை உடனடியாகத் துண்டித்துக் கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆல்கா தீட்சித், அவரது மகன் ஜெய்தீப் தீட்சித் மற்றும் லக்கன் சிங் ஆகியோர் தொழிலதிபர் சிங்கைத் தொடர்ந்து மிரட்டத் தொடங்கினர். அவர் இந்தூரில் தொடர்ந்து தொழில் செய்ய வேண்டுமானால் தங்களுக்கு 1 கோடி ரூபாய் தர வேண்டும் என்றும், இல்லையெனில் அவரது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டு அவதூறு பரப்புவோம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.
பணப்பறிப்பு கும்பலின் இந்த அச்சுறுத்தலுக்கு ஸ்வேதா ஜெயின் என்ற பெண்ணும் உடந்தையாகச் செயல்பட்டுள்ளார். மேலும், வினோத் சர்மா என்ற போலீஸ் கான்ஸ்டபிள், இந்த விவகாரத்தை விசாரணை செய்வது போல நடித்து, தொழிலதிபர் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்திப் பணத்தைப் பறிக்க முயன்றுள்ளார்.
கும்பலின் மிரட்டலுக்குப் பணியாத தொழிலதிபர் ஹிதேந்திரா சிங், இதுகுறித்து இந்தூர் காவல் துறையிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், மிரட்டல் விடுத்த ஆல்கா தீட்சித், அவரது மகன் ஜெய்தீப், லக்கன் சிங், ஸ்வேதா ஜெயின் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் வினோத் சர்மா ஆகிய 5 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இந்தூர் காவல் துணை ஆணையாளர் (DCP) ராஜேஷ் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
