பாலத்தில் நடுரோட்டில் சிவப்பு கம்பளம் விரித்து கேக் வெட்டிய தொழிலதிபர் மனைவி... பரபரப்பு வீடியோ !

 
cake

அசாம் மாநிலத்தின் கவுகாத்தி பகுதியில் வசித்து வரும் பிரபல தொழிலதிபர் கௌதம் பருவா, கடந்த ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவு நேரத்தில் தனது மனைவி ஹரபி என்பவரின் 42-வது பிறந்தநாளை மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளார். இதற்காகப் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த பிப்ரவரி 14 அன்று திறந்து வைக்கப்பட்ட சுமார் 3,030 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு வழி குமார் பாஸ்கர் வர்மா சேது பாலத்தின் ஒரு பகுதியை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். அந்தப் பொதுப் போக்குவரத்துப் பாலத்தின் நடுரோட்டிலேயே தங்களது வாகனங்களை நிறுத்தி, சிவப்பு கம்பளம் விரித்து, பலூன்களால் அலங்காரம் செய்து நள்ளிரவில் கேக் வெட்டி ஆரவாரமாகக் கொண்டாடியுள்ளனர்.

பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக அமைந்த இந்த ஆடம்பரப் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகள், நேற்று திங்கள்கிழமை மாலை சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கர வைரலாகப் பரவத் தொடங்கின. பொது உள்கட்டமைப்பைத் தங்களது சொந்தப் பார்ட்டி அரங்கம் போல மாற்றிய இந்தச் செயல் சாதாரண ஏழை எளிய மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் கடுமையான அதிருப்தியையும் பொதுப் பாதுகாப்பற்ற நிலைமையையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கவுகாத்தி போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் ஜெயந்த சாரதி போரா உத்தரவின் பேரில் பாரலுமுக் காவல் நிலையப் போலிசார் உடனடியாக இந்த விவகாரத்தில் தங்களது சட்டப்படியான விசாரணையைத் தொடங்கினர்.

போலிசாரின் துரித விசாரணையின்படி, பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், பொது வழியை மறித்தல் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தருதல் ஆகிய கடுமையான பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் தொழிலதிபர் கௌதம் பருவா, அவரது மனைவி ஹரபி உட்பட மொத்தம் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டவிரோதக் கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட தொழிலதிபரின் சொகுசு கார் உட்பட மொத்தம் 4 சொகுசு வாகனங்களைப் போலிசார் தற்பொழுது அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 14 பேருக்கும் போலிசார் தற்பொழுது நேரில் ஆஜராகக் கோரி முறைப்படி சம்மன் அனுப்பித் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.