இடைத்தேர்தல்... தாராபுரம் அருகே காரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5.5 லட்சம் பறிமுதல்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ஐந்தரை இலட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், தாராபுரம் பழைய திருப்பூர் ரோடு சங்கரண்டாம்பாளையம் பிரிவு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூ.5.5 லட்சம் ரொக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. காரை ஓட்டிவந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சிவில் பொறியாளர் பாலசுப்பிரமணியன் என்பதும், பழனியிலிருந்து திருப்பூர் நோக்கிச் செல்வதும் தெரியவந்தது.
கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால், பறக்கும் படையினர் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்து தாராபுரம் வட்டாட்சியர் ராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.
