இடைத்தேர்தல் இழுபறி.. சிதறும் அதிமுக, பாமக கூட்டணி... அதிமுக தலைவர்களைச் சந்திக்க மறுக்கும் அன்புமணி!

 
அன்புமணி

அதிமுக கூட்டணியில் நிலவி வரும் தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் களப் பணிகள் தொடர்பான அதிருப்தி காரணமாக, இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிப்பது குறித்துப் பாமக இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அன்புமணி

நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிமுகவினர் சரியாகக் களப்பணி செய்திருந்தால் பாமக குறைந்தபட்சம் 10 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்று பாமகவினர் கருதுகின்றனர். பாமக தரப்பில் கூட்டணி தர்மத்திற்காகப் பம்பரமாக உழைத்த போதிலும், அதிமுகவினர் போதிய அளவில் பணியாற்றவில்லை என்றும், கடமைக்காக மட்டுமே கூட்டணி செயல்பட்டது என்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் அதிருப்தியில் உள்ளார்.

இடைத்தேர்தலில் எந்தத் தரப்புக்கு ஆதரவளிப்பது என்பது குறித்துப் பாமக இன்னும் இறுதி முடிவு எடுக்காத நிலையில், அன்புமணியைச் சந்தித்துப் பேச அதிமுக மூத்த தலைவர்கள் பலமுறை நேரம் கோரியுள்ளனர். ஆனால், பொதுத்தேர்தலில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் அன்புமணி இதுவரை அவர்களுக்குச் சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அன்புமணி

மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் பாமகவிற்கு நல்ல பலத்த வாக்கு வங்கி உள்ள நிலையில், ஒருவேளை பாமக தங்களை ஆதரிக்காவிட்டால் அது தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அதிமுக தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. தேர்தல் களத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் காரணமாக அன்புமணி தற்போது அதிமுக தலைமைக்குத் தன் எதிர்ப்பைக் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.