தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தவெக அரசின் பலப்பரீட்சை.. கள நிலவரம் எப்படியிருக்கு?!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது. அரசின் முதற்கட்டச் செயல்பாடுகள், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளத் தேவையான பெரும்பான்மை பலம் மற்றும் ஒவ்வொரு தொகுதியின் கள நிலவரம் குறித்த பார்க்கலாம்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தவெக 108 இடங்களையும், திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின.
அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள்: மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் மற்றும் இரண்டு தொகுதிகளில் வென்ற முதல்-அமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி என 7 தொகுதிகள் காலியாக உள்ளது. இதில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தடை நீடிக்கப்பட்டிருந்தாலும், சட்டப்பூர்வ 6 மாத கால வரம்பிற்குள் தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது.

ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் ஊழல் ஒழிப்பை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படுவது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே சமயம் ஆங்காங்கே ஏற்படும் மின்வெட்டுச் சிக்கல்கள் மற்றும் மின் கட்டண உயர்வு தொடர்பான புகார்கள் ஆளுங்கட்சிக்குச் சவாலாக அமைந்துள்ளன. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசின் ஒவ்வொரு நகர்வையும் தீவிரமாகக் கண்காணித்து விமர்சித்து வருகின்றன. மெஜாரிட்டி எண்ணிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள இந்த 7 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயச் சூழலில் ஆளுங்கட்சி உள்ளது.
1. திருச்சி கிழக்கு
முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்றுப் பின் ராஜினாமா செய்த தொகுதி. பிற கட்சிகளில் இருந்து தவெகவிற்கு வந்தவர்கள் இங்கு போட்டியிட விருப்பம் தெரிவிப்பதால், திமுக மற்றும் தவெக இடையே இங்கு மிகக் கடுமையான போட்டி நிலவும்.
2. விராலிமலை
முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்குத் தொகுதி மக்களிடையே உள்ள தனிப்பட்ட செல்வாக்கு த.வெ.க.வுக்குப் பலம் சேர்க்கிறது. அவர் மீண்டும் த.வெ.க. சார்பில் களம் இறக்கப்பட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
3. கரூர்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் களம் கண்டால், அதிமுக மற்றும் தவெகவின் முந்தைய வாக்குகளை ஒன்றிணைத்து வெற்றி பெற வாய்ப்புள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களைப் பொறுத்தே இறுதி முடிவுகள் அமையும்.

4. மதுராந்தகம்
முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் த.வெ.க. சார்பில் களம் இறங்கும் பட்சத்தில் சாதகமான சூழல் நிலவக்கூடும். ஆனால் திமுக - அதிமுக. வலுவான வேட்பாளர்களை நிறுத்தினால் போட்டி கடுமையாகும்.
5. தாராபுரம்
அதிமுகவில் இருந்து விலகிய திலகபாமா போட்டியிட்டால் கூடுதல் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும் எதிர்த்துக் களம் காணும் வேட்பாளர்களின் பலமே வெற்றியைத் தீர்மானிக்கும்.
6. பெருந்துறை
முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.ஜெயக்குமார் மற்றும் தி.மு.க. முன்னாள் வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் ஆகிய இருவருமே த.வெ.க. பக்கம் கவனம் செலுத்துவதால், வேட்பாளர் யார் என்பது உறுதியான பின்னரே கள நிலவரத்தைக் கணிக்க முடியும்.
7. அம்பாசமுத்திரம்
இசக்கி சுப்பையா த.வெ.க. வேட்பாளராகக் களம் இறங்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்டாலோ அல்லது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டாலோ அங்கு மும்முனைப் போட்டி நிலவி வெற்றி வாய்ப்பு கடினமாக மாறலாம்.
