ரூ.3.15 லட்சம் கோடிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - PM கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

 
கிசான்

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தை 2026-27 நிதி ஆண்டு முதல் 2030-31 நிதி ஆண்டு வரை மேலும் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்படுத்துவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தடையின்றிச் செயல்படுத்துவதற்காக ரூ.3.15 லட்சம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.6,000 நிதி உதவி, மூன்று சம தவணைகளாக (ரூ.2,000 வீதம்) நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

பி.எம். கிசான் விவசாயி

பிப்ரவரி 2019-இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், இதுவரை 23 தவணைகளில் ரூ.4.47 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில் அளிக்கப்பட்ட 23-ஆவது தவணையில் மட்டும் 9.49 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

விதைகள், உரங்கள் மற்றும் பிற விவசாய இடுபொருட்களைச் சாகுபடி பருவத் தொடக்கத்திலேயே வாங்க இத்தொகை பெரிதும் உதவுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வருமானப் பாதுகாப்பை உறுதி செய்யவும் உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.