'ஜனநாயகன்' படம் கேபிள் டிவியில் ஒளிபரப்பிய உரிமையாளர் கைது!

 
விஜய் விஜய்

நடிகர் விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்த நிலையில், அதனை உள்ளூர் கேபிள் டிவியில் ஒளிபரப்பிய உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தணிக்கைக்குழு சிக்கல்கள் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போயிருந்த 'ஜனநாயகன்' திரைப்படம், கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியானது. இது திரையுலகினர் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜனநாயகன்

இந்நிலையில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் இயங்கி வரும் 'ராசி கேபிள் டிவி' மற்றும் அதன் துணை சேனலான 'ராசி பிரைம் மூவிஸ்'-இல் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி இரவு இந்தப் படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. சுமார் 21 நிமிடங்கள் படம் ஓடிக்கொண்டிருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

இது தொடர்பாக டிவி கே நிர்வாகி மோகனப்பிரியா அளித்த புகாரின் பேரில், கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கேபிள் டிவி உரிமையாளர் பழனிசாமி (44) என்பவரை இன்று (ஏப்ரல் 13) போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த கணினி மற்றும் நான்கு ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பழனிசாமி மீது காப்புரிமைச் சட்டம் , தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் கேபிள் தொலைக்காட்சி ஒழுங்குமுறைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் எப்படி இவருக்குக் கிடைத்தது என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்தப் படத்தை இணையத்தில் கசியவிட்டதாகச் சென்னை சைபர் கிரைம் போலீசார் 6 பேரைக் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகன் விஜய்

விஜய்யின் கடைசிப் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே இவ்வாறு கசிந்து வருவது படக்குழுவினரை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.