அமலுக்கு வந்தது... எல்லைகளில் தீவிர கண்காணிப்பு... இன்று முதல் கனிமவளம் ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கட்டாயம்!

 
லாரி

தமிழகத்தில் கருங்கற்கள், எம்-சாண்ட், மணல் உள்ளிட்ட கனிம வளங்களைக் கடத்துவதைத் தடுத்து, சட்டவிரோதச் சுரங்க நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கனிமவளம் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவது இன்று நவம்பர் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது அமலுக்கு வந்தது. 

கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த அளிக்கப்பட்டிருந்த அவகாசம் நேற்று அக்டோபர் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இன்று முதல் AIS-140 தரத்திலான ஜி.பி.எஸ். கருவிகள் மற்றும் இணையவழி இணைப்பு வசதி கொண்ட லாரிகள் மட்டுமே கனிம வளங்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.

லாரியில் ஜிபிஎஸ்

ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படாத மற்றும் இணையத்தில் இணைக்கப்படாத வாகனங்களுக்கு இன்று முதல் எந்தவிதமான கனிமப் போக்குவரத்து அனுமதிச் சீட்டும் வழங்கப்படாது. ஜி.பி.எஸ். பொருத்தாத லாரிகளில் கனிம வளங்கள் அல்லது கட்டுமானப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டால், அந்த வாகனங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் எனக் கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் எச்சரித்துள்ளார்.

லாரி

விதிமுறைகளை மீறும் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது குற்றவியல் சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் பாயும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனிம வளப் போக்குவரத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரத் தமிழக அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை லாரி உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.