அமலுக்கு வந்தது... இன்று முதல் லைசென்ஸ், ஆர்சி சான்றிதழ்களை ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்யலாம்!

 
ஓட்டுனர் உரிமம்

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனப் பதிவு சான்றிதழைத் தாங்களே பதிவிறக்கம் செய்யும் புதிய நடைமுறை இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் தாங்களே இணையம் வழியே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்.

லைசென்ஸ்

முதலமைச்சரின் அறிவிப்பிற்கு இணங்க இன்று முதல் இந்தச் புதிய நடைமுறை அமலுக்கு வருவதாகத் தமிழக அரசு முறைப்படி அரசாணையை வெளியிட்டுள்ளது.

இனி புதிய வாகனம் வாங்குபவர்கள் பதிவு முடிந்தவுடன் டிஜிட்டல் ஆர்சி சான்றிதழை நேரடியாக இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல், ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்குத் தேர்வு முடிந்த அன்றைய தினமே டிஜிட்டல் வடிவிலான டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட்டுவிடும். இந்த டிஜிட்டல் ஆவணங்களை பொதுமக்கள் எவ்விதக் கட்டணமும் இன்றி ஓராண்டுக்கு இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டிரைவிங் லைசென்ஸ்

அனைத்து டிஜிட்டல் ஆவணங்களிலும் பிரத்யேக க்யூஆர் குறியீடு இடம்பெற்றிருக்கும். இதனை ஸ்கேன் செய்வதன் மூலம் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் அரசு அமைப்புகள் அந்த ஆவணங்களின் நம்பகத்தன்மையை எளிதில் சரிபார்த்துக் கொள்ள முடியும்.