அமலுக்கு வந்தது... இன்று முதல் சென்னை புறநகர் ரயில் சேவையில் புதிய அட்டவணை!

 
புறநகர் ரயில்

சென்னை புறநகர் மின்சார ரயில்களின் கால அட்டவணையில் தெற்கு ரயில்வே முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இந்தப் புதிய அட்டவணை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை சேவைகளுக்கு இன்றும் வார நாட்களுக்கான சேவைகளுக்கு நாளை நவம்பர் 2-ம் தேதியும் புதிய நேர அட்டவணை நடைமுறைக்கு வருகிறது.

மின்சார ரயில்

திருவள்ளூர் வழித்தடத்தில் புதிய சேவை

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூரில் இருந்து மதியம் 12.25 மணிக்குப் புறப்பட்டு 1.45 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகத்தைச் சென்றடையும் புதிய மின்சார ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், காலை 7.10 மணிக்கு சென்ட்ரலில் இருந்து பட்டாபிராம் வரை இயக்கப்பட்ட ரயில் திருவள்ளூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குப் புறப்படும் சென்ட்ரல் – திருவள்ளூர் ரயில் கடம்பத்தூர் வரை நீட்டிக்கப்படுகிறது.

புறநகர் ரயில்

சூலூர்பேட்டை வரை நீட்டிப்பு

சென்ட்ரலில் இருந்து காலை 5.20 மணிக்குப் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் சூலூர்பேட்டை வரை நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் சூலூர்பேட்டையில் இருந்து காலை 8.10 மணிக்குப் புறப்படும் ரயில் 10.40 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகத்தை வந்தடையும்.

மேலும், இரவு 7.30 மணிக்கு சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் விரைவு மின்சார ரயில் இனி அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும். அரக்கோணம் – சென்னை கடற்கரை வழித்தடத்தில் காலை 7.30 மணிக்குப் புறப்படும் ரயில் கூடுவாஞ்சேரியில் காலை 9.20 மணிக்கு கூடுதல் நிறுத்தம் பெறுகிறது.

சென்னை கடற்கரை – வேளச்சேரி – பரங்கிமலை வழித்தடத்தில் கால அட்டவணை மாற்றம் இல்லை. பயணிகள் புதிய ரயில் நேரங்களை NTES செயலியில் சரிபார்த்துக்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.