பயன்பாட்டிற்கு வந்தது... டாஸ்மாக்கில் காலி பாட்டில்களைச் சேகரிக்க தானியங்கி இயந்திரம்!

 
டாஸ்மாக் டாஸ்மாக்

தமிழகத்தில் காலி மதுபாட்டில்கள் ஆங்காங்கே வீசப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் இணைந்து நவீனத் தொழில்நுட்பத் தீர்வு ஒன்றைக் கையில் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் முதன்முறையாகப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் அதிநவீனத் தானியங்கி இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

சென்னை எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை எண் 480-இல் இந்த செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட நவீனத் தானியங்கி இயந்திரம் சோதனை முறையில் தற்போது நிறுவப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்திய காலி மதுபாட்டில்களை இந்த இயந்திரத்தின் அருகே கொண்டு செல்லும்போது, பாட்டிலில் ஒட்டப்பட்டுள்ள லேபிளை இயந்திரம் துல்லியமாக ஸ்கேன் செய்கிறது. அது டாஸ்மாக் பாட்டில் தான் என்பதை உறுதி செய்த பின்னர், பாட்டிலை உள்வாங்கிக் கொண்டு, அதற்கான குறிப்பிட்ட தொகையைத் (பாட்டிலுக்கு 10 ரூபாய்) தானியங்கி முறையில் வாடிக்கையாளருக்கு உடனே திருப்பி வழங்குகிறது.

பாட்டில்

எழும்பூர் கடையில் மேற்கொள்ளப்படும் இந்த சோதனை முயற்சி முழுமையான வெற்றி அடையும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இந்த நவீன இயந்திரங்களைப் பொருத்த அரசு திட்டமிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. காலி பாட்டில்களைத் திரும்பக் கொடுக்கும் போது இந்த 10 ரூபாய் வாடிக்கையாளர்களுக்குத் திரும்பக் கிடைக்கும் என்று கூறப்பட்டாலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்தன. தற்பொழுது இந்த செயற்கை நுண்ணறிவுத் தானியங்கி இயந்திரம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எவ்விதப் பணிப் பரிமாற்றத் தடையுமின்றி நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால், இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாட்டில்

தமிழகத்தில் தினசரி சுமார் 2 கோடி மதுபாட்டில்கள் விற்பனையாகும் சூழலில், காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் பின்னணியில், காலி பாட்டில்களால் காடுகள், விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் மாசடைவதைத் தடுக்க, இத்திட்டத்தைத் தமிழகம் முழுவதும் முழுமையாக அமல்படுத்த சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது.

ஏற்கனவே தமிழகத்தின் 28 மாவட்டங்களில் இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், மீதமுள்ள மாவட்டங்களிலும் இதனைத் தடையின்றிச் செயல்படுத்தக் கடந்த மே 31-ஆம் தேதி வரை உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.