நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடலாமா? மருத்துவர்களின் முக்கிய அறிவுரைகள்!
நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கை நீரிழிவு (சர்க்கரை நோய்) உள்ளவர்கள் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் வழங்கும் தெளிவான விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் என்னவென்று தெரிஞ்சுக்கோங்க.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இயற்கையான சர்க்கரை மற்றும் அதிக கிளைசெமிக் குறியீடு இருந்தாலும், நீரிழிவு நோயாளிகள் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மிகக் குறைந்த அளவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கைச் சாப்பிட்டு வரலாம்.அதிக உடல் எடை கொண்டவர்கள் மற்றும் தீவிர இதய நோய் பாதிப்புகள் உள்ள சர்க்கரை நோயாளிகள் இக்கிழங்கைத் தவிர்ப்பதே நல்லது.
இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து சர்க்கரை உடம்பில் உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைத்து, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கிறது. பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை உயர்த்துகிறது. இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்து இதய நோய் மற்றும் பக்கவாத அபாயத்தைக் குறைக்கிறது.

வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தித் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால், சருமச் செல்களை புதுப்பித்து புற ஊதாக் கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
