தவெகவை நம்ப முடியுமா? குழப்பத்தில் தோழமைக் கட்சிகள் – விசிகவுக்குள் வெடிக்கும் மோதல்!

 
கூட்டணி

தமிழகத்தில் நிலவும் புதிய அரசியல் சூழலில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுடன் கூட்டணி வைத்துள்ள தோழமைக் கட்சிகளுக்குள் கடுமையான உள்முரண்பாடுகளும் குழப்பங்களும் நீடித்து வருகின்றன. குறிப்பாக, கூட்டணிக் கட்சிகளுடனான உறவைப் பேணிக் கொண்டு செல்வதில் முதலமைச்சர் விஜய் சறுக்குவதாக எழுந்துள்ள விமர்சனங்கள், தோழமைக் கட்சிகளுக்குள் 'தவெக ஆதரவு அணி', 'தவெக எதிர்ப்பு அணி' என இருவேறான பிளவுகளை உருவாக்கியுள்ளன.

இந்தக் கூட்டணி குழப்பம் மற்றும் கருத்து வேறுபாடுகளின் உச்சக்கட்ட மோதலானது விசிகவுக்குள் தினம்தோறும் எதிரொலித்து வருவதாகக் கூறப்படுகிறது. விசிக தலைவர் தொல். திருமாவளவன் அண்மையில், "தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதாலேயே நாங்கள் தவெக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்து விட்டோம் என்று அர்த்தமல்ல; இன்னமும் நாங்கள் திமுக கூட்டணியைத் தொடர்வதாகவே கருதுகிறோம்" என்று பேசியிருந்தார்.

திருமா திருமாவளவன் கூட்டணி

திருமாவளவனின் இந்த அந்தஸ்து இல்லாத, இரட்டை நிலைப்பாடு கொண்ட பேச்சுக்குக் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பிற கட்சிகள் "அமைச்சரவையில் இருந்துகொண்டு இப்படியொரு வார்த்தை ஜாலம் தேவையில்லை" எனக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தன. மேலும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் திருமாவளவனின் இந்த விசித்திரமான முடிவை "நோபல் பரிசு கொடுக்கலாம்" எனப் பகிரங்கமாக எள்ளி நகையாடினார்.

திருமாவளவனின் இத்தகைய தடுமாற்றமான அரசியல் நகர்வுகள் விசிகவின் உள்மட்ட நிர்வாகிகளையே அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. கட்சிக்குள் தற்போது இருவேறு தரப்புகள் முட்டி மோதி வருகின்றன.  "பெரிதும் போராடிப் பெற்றுள்ள தற்போதைய அதிகாரப் பகிர்வையும், அமைச்சரவை இடங்களையும் நாம் இழந்துவிடக் கூடாது. தவெக கூட்டணியை விட்டு விசிக எக்காரணம் கொண்டும் வெளியேறக் கூடாது" என ஒரு தரப்பு பிடிவாதமாக உள்ளது.

கூட்டணி திருமா முஸ்லிம்

"அரசியல் அனுபவமே இல்லாத, முதிர்ச்சியற்ற ஒரு தலைமையின்கீழ் நாம் பயணிப்பது கட்சியின் கொள்கைகளுக்கே ஆபத்தானது. தவெகவுக்கு இன்னும் போதிய அரசியல் முதிர்ச்சி வரவில்லை" என மறுதரப்பு கடுமையாக முரண்பட்டு வருகிறது.

தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த திமுக, தவெக என இரண்டுமே 'இந்தியா' கூட்டணியில் இருக்க வேண்டும் என்று திருமாவளவன் சமாதானம் கூறி வந்தாலும், உள்ளூர் அளவில் தவெகவை முழுமையாக நம்பலாமா என்ற சந்தேகம் விசிக மற்றும் பிற இடதுசாரி தோழமைக் கட்சிகளுக்குள் பெரும் குடைச்சலைக் கொடுத்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த அணிகளுக்கு இடையேயான உட்கட்சிச் பூசல்களும், பொதுவெளியில் தலைவர்கள் மாற்றி மாற்றிப் பேசி வரும் முரண்பட்ட கருத்துகளும் தமிழகக் கூட்டணி அரசியலில் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.