காதலி கொலை வழக்கில் தலைமறைவான நபர் கைது... கனடா காவல்துறை நடவடிக்கை!
கனடா நாட்டின் டொராண்டோ நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிமான்ஷி குரானா 2025 டிசம்பர் 19 ம் தேதியன்று வீட்டில் பிணமாகக் கிடந்தார். தீவிர விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததுடன், இது தொடர்பாக ஹிமான்ஷி குரானாவின் காதலனான டொராண்டோவைச் சேர்ந்த அப்துல் கபூரி மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அப்துல் கபூரியைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்ததோடு, அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுத் தகவல்களை வழங்கும்படி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் தலைமறைவான 7 மாதங்களுக்குப் பிறகு அப்துல் கபூரியைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வேறு நாட்டுக்குத் தப்பிச் சென்ற அவரைக் காவல்துறையினர் வெற்றிகரமாகக் கைது செய்து கனடாவுக்கு அழைத்து வந்துள்ளனர். அவர் எந்த நாட்டில் இருந்தார் என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடாமல், டொராண்டோ காவல்துறையின் தலைமறைவுக் குற்றவாளிகளைப் பிடிக்கும் பிரிவு மற்றும் கொலை வழக்குகளை விசாரிக்கும் பிரிவு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அவரைக் கனடாவுக்குக் கொண்டுவரத் தேசிய மற்றும் சர்வதேச காவல் அமைப்புகளுடன் இணைந்து அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் கொலை செய்யப்பட்ட இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளது வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் இந்தத் தொடர் முயற்சியும் சர்வதேச அளவிலான ஒருங்கிணைப்பும் குற்றவாளிகள் தப்பியோட முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது. கைது செய்யப்பட்ட அப்துல் கபூரி மீது நீதிமன்றத்தில் முறையான சட்ட நடவடிக்கைகள் தொடரப்பட்டு வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
