தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு! மார்ச் 29-இல் 234 தொகுதிகளுக்கும் மெகா அறிமுகம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நடத்தவிருந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம், தேர்தல் ஆணையத்தின் அனுமதி மற்றும் சில தொழில்நுட்பக் காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாமல்லபுரத்தில் அல்லது நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் முதற்கட்டமாக 110 வேட்பாளர்களை அறிமுகம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்கான விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. தேர்தல் ஆணையத்திடம் இருந்து முறையான அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் சில விதிமுறைச் சிக்கல்கள் காரணமாக, இறுதி நேரத்தில் இந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட இந்த அறிமுகக் கூட்டம், வரும் மார்ச் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இன்று 110 பேர் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட இருந்த நிலையில், வரும் 29-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போகும் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் விஜய் அறிமுகம் செய்து வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது சற்று ஏமாற்றத்தைத் தந்தாலும், 234 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளது தவெக தொண்டர்களிடையே இரட்டிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் பிரச்சார வியூகங்கள் குறித்தும் அன்றைய தினம் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
