"பதவி விலக முடியாது" - வைகோவின் உத்தரவை மறுத்த மதிமுக MLA அறிக்கை!

 
வைகோ மதிமுக ராசேந்திரன்

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதைத் தொடர்ந்து அக்கட்சியில் மிகப்பெரிய உள்விவகாரப் பூகம்பம் வெடித்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாகப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற சூழல் உருவானது. இந்நிலையில், மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை எனப் பகிரங்கமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவைச் சேர்ந்த கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. இராசேந்திரன் தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சி, சாதி, மதம் என அனைத்தையும் கடந்து கடையநல்லூர் தொகுதி மக்கள் என்னை நம்பி வாக்குகளித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது எனது கடமை. எனவே, எனது எம்.எல்.ஏ பதவியை என்னால் விலக முடியாது என்பதை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் நான் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டேன்."

வைகோ ஸ்டலின்

கூட்டணியில் இருந்து அவசரமாக வெளியேறுவதில் தனக்கு உடன்பாடில்லை என்பதையும் இராசேந்திரன் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.

அரசியல் சூழல்களை ஆராய்ந்து முடிவெடுக்கலாம், தற்போது எந்த அவசரமும் வேண்டாம்; இன்னும் ஒரு 6 மாத காலத்திற்குப் பொறுத்திருப்போம் என்று நான் வைகோவிடம் ஆலோசனை கூறினேன். ஆனால், நான் கூறிய இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ள வைகோ மறுத்து விட்டார்.

திமுக கூட்டணியில் இருந்து வைகோ அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், அவரது சொந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே கட்சியின் தலைமைக்கு எதிராகப் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து அறிக்கை வெளியிட்டிருப்பது மதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், தமிழக அரசியல் களத்தில் கடுமையான சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.