"தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.25,000 சம்பளம் தர முடியாதா?" - முதல்வருக்கு உழைப்போர் உரிமை இயக்கம் கேள்வி!
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, தூய்மைப் பணியாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை குறித்து உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி, தமிழக அரசிடம் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
"ஒரு சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளருக்கு மாதம் ரூ.25,000 ஊதியம் தேவைப்படும் என்று கருதும் முதல்வர், நாள்தோறும் கடினப் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000 சம்பளம் வழங்க முடியாதா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"கடந்த 10 மற்றும் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு தற்போதைய சூழலில் வழங்கப்படும் மாதம் ரூ.19,000 சம்பளம் போதுமானதாக இல்லை" என்று சுட்டிக்காட்டினார்.
உழைக்கும் வர்க்கத்தின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தைக் காலத்திற்கு ஏற்ப உயர்த்த அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மாநகராட்சி ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், தூய்மைப் பணியாளர்களின் சம்பள உயர்வு குறித்த இந்த விவாதம் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
