தலைநகரில் ஸ்தம்பித்த போக்குவரத்து... 3 நாட்கள் ஆட்டோ, டாக்சிகள் வேலைநிறுத்தம்!
மத்திய அரசு மற்றும் டெல்லி மாநில அரசின் போக்குவரத்து கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வணிக ரீதியிலான வாகன ஓட்டிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்குப் பிரம்மாண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அமைப்பின் ஆதரவுடன், 'சாலக் சக்தி யூனியன்' உள்ளிட்ட 68-க்கும் மேற்பட்ட போக்குவரத்து சங்கங்கள் ஒன்றிணைந்து இந்தச் சக்கர முடக்கப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் டெல்லி, நொய்டா, குருகிராம் போன்ற முக்கிய நகரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்து சேவை இன்று காலை முதலே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லி வட்டாரத்தில் டாக்ஸி மற்றும் ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படாமல் ஒரே நிலையிலேயே நீடித்து வருவதாகப் போராட்டக் குழுவினர் குற்றம் சாட்டுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 98.64 ரூபாயாகவும், டீசல் விலை 91.58 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதோடு, சிஎன்ஜி எரிவாயு விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்களால் குடும்பம் நடத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் வாகனங்களின் காப்பீட்டுக் கட்டணம், உடற்தகுதிச் சான்றிதழ் மற்றும் பராமரிப்புச் செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையிலும், பழைய கட்டணத்தையே வசூலிக்க கட்டாயப்படுத்துவது தங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்துள்ளதாக அவர்கள் வாழ்வாதாரக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையில் ஓலா, உபெர், ரேபிடோ போன்ற ஆன்லைன் செயலி வழி நிறுவனங்கள் தங்களை மிகக் கொடூரமாகப் பொருளாதாரச் சுரண்டல் செய்வதாகவும், அடிமைகளைப் போல நடத்துவதாகவும் ஓட்டுநர் சங்கத் துணைத் தலைவர் அனுஜ் குமார் ரத்தோர் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த மூன்று நாள் தொடர் போராட்டத்தால் ஆன்லைன் கார் சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ள போதிலும், மெட்ரோ இரயில்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல இயங்கி வருகின்றன. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அரசு தங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று முறையான கட்டண உயர்வை அறிவிக்கவில்லை என்றால், இந்தத் தற்காலிகப் போராட்டத்தைப் பெரிய அளவிலான தொடர் போராட்டமாக மாற்றுவோம் என்றும் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.
