விரைவுச்சாலையில் காரை மறித்துக் குடும்பத்தினரைத் தாக்கிய மர்ம கும்பல்... பரபரப்பு வீடியோ!

 
kaar

பெங்களூரு – மைசூரு விரைவுச்சாலையில் மர்மக் கும்பல் ஒன்று காரில் சென்ற ஒரு குடும்பத்தினரை நடுரோட்டில் மறித்துக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் மத்தூர் நெடுஞ்சாலைப் பகுதியில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட காரின் பின்னால் வந்த மற்றொரு வாகனத்தின் கேமராவில் இந்த ஒட்டுமொத்தக் கொடூரமும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

விரைவுச்சாலையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த ஒரு நீல நிற காரை நோக்கி ஓடிவரும் ஒரு கும்பல், காரின் கதவை வலுக்கட்டாயமாகத் திறந்து ஓட்டுநர் இருக்கையில் இருந்த நபரை சரமாரியாகத் தாக்குகிறது. அந்த கும்பலில் இருந்த ஒருவர், சக வாகன ஓட்டிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இரும்புப் பொருள் ஒன்றைக் கொண்டு ஓட்டுநரைத் தாக்கும் கொடூரக் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்குள்ளான அந்த காரில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்படச் சுமார் 4 முதல் 5 பேர் இருந்துள்ளனர்.

தாக்குதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அந்த வழியே சென்ற மற்ற வாகன ஓட்டிகள் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். வீடியோவின் இறுதிப் பகுதியில், காரில் இருந்த பெண் ஒருவர் கீழே இறங்கி தாக்குதலை நிறுத்துமாறு கைகூப்பிக் கெஞ்சுவதும், ஆனாலும் ஆத்திரமடைந்த கும்பல் ஓட்டுநரைச் சாலையிழுத்து வந்து தொடர்ந்து தாக்குவதும் தெரிகிறது. இந்த மோதலுக்கான துல்லியமான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை அடையாளம் காண்பது குறித்தோ அல்லது அவர்களின் கைது குறித்தோ உள்ளூர் போலீசார் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.