17 வயது சிறுவன் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து ஒருவர் பலி... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ !
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் மதுராநகர் பகுதியில், இன்று காலை 11 மணியளவில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. மேலும் சாலையோரம் நின்றிருந்த 7 வாகனங்கள் இந்த விபத்தில் கடுமையாகச் சேதமடைந்தன. இந்த எதிர்பாராத விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 60 வயது முதியவர் ராஜேந்திர குமார் மற்றும் அவரது சகோதரர் பிரபாகர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ராஜேந்திர குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சகோதரர் பிரபாகர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சி காட்சிகள் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்த விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது 17 வயது சிறுவன் என்பது தெரியவந்த நிலையில், அவனை அப்பகுதி மக்கள் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விபத்து நடந்த சமயத்தில் காரில் மொத்தம் 3 பேர் இருந்ததாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரை ஓட்டி வந்த சிறுவனைத் காவல்துறையினர் கைது செய்து இதுகுறித்துத் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
