பைக் மீது மோதுவதைத் தவிர்த்து மரத்தில் மோதிய கார்... சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி!
மத்திய பிரதேச மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் ஒன்று சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், மத்திய பிரதேசத்தின் தமியா பகுதியில் இருந்து மத்குளி பகுதியை நோக்கி சொகுசு கார் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. கார் நர்மதாபுரம் மாவட்ட எல்லைக்கு அருகே சென்ற போது, எதிர்த் திசையில் இருந்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது. அதன் மீது நேருக்கு நேர் மோதிவிடக் கூடாது என்ற நோக்கில், காரை ஓட்டுநர் திடீரென ஓரமாகத் திருப்பியுள்ளார்.

எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்த கார், சாலையோரம் இருந்த ஒரு பெரிய மரத்தின் மீது அதிவேகமாகப் போய் மோதி நொறுங்கியது. மரத்தின் மீது மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த கொடூர விபத்தில் காரில் பயணித்த தம்பதி மற்றும் அவர்களது 8 வயது சிறுவன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களுடன் காரில் இருந்த மேலும் இருவர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.
விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் நர்மதாபுரம் மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றினர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்குக் காரணமான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் குறித்தும், விபத்தின் போது காரின் வேகம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
