டூ வீலர் மீது கார் மோதி கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் தனது மகள் பஞ்சவர்ணம் மற்றும் மருமகன் புல்லாணி ஆகியோருடன் ஒரே இருசக்கர வாகனத்தில் ஏர்வாடி சாலை வழியாகப் பயணம் செய்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாகக் பலத்த வேகத்துடன் மோதியுள்ளது. இந்த விபத்தின் வீரியம் காரணமாக, பைக்கில் பயணித்த மாடசாமி, பஞ்சவர்ணம், புல்லாணி ஆகிய மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏர்வாடி காவல் துறையினர், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர்செய்தனர். உயிரிழந்த மூன்று பேரின் சடலங்களையும் மீட்ட போலீசார், அவற்றை உடற்கூறாய்விற்காக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து ஏர்வாடி போலீசார் தற்பொழுது வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரின் அலட்சியம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மருமகன் என 3 பேர் சாலை விபத்தில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்த சம்பவம் திருப்புல்லாணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
