இளம்பெண் ஓட்டிய கார் மோதி விபத்து... தீபாவளி தினத்தில் மனைவிக்குச் சேலை வாங்கச் சென்றவர் உயிரிழப்பு!
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இளம்பெண் ஒருவர் ஓட்டி வந்த சொகுசு ஜீப் மோதியதில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மனைவிக்குச் சேலை வாங்க இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் சிங் சவுகான் (வயது 55). தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தனது மனைவிக்குப் புதிய சேலை வாங்கி வருவதற்காக, சந்தோஷ் சிங் சவுகான் தனது ஸ்கூட்டரில் கடைக்குச் சென்றுள்ளார்.
கடைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பும் வழியில், தனது வீட்டில் இருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் வந்துகொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த சொகுசு ரக ஜீப் ஒன்று அவரது ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.

ஸ்கூட்டர் மீது மோதிய பிறகும் கட்டுப்பாட்டை இழந்து சீறிப் பாய்ந்த அந்த ஜீப், அப்பகுதியில் உள்ள பேராசிரியர் கைலாஷ் சவுகான் என்பவரின் வீட்டு மதிலில் மோதியதுடன், ஜி.எஸ்.டி கண்காணிப்பாளர் அனிதா மகாதேவன் என்பவரது வீட்டின் தோட்டத்திற்குள் புகுந்து நின்றது.
விபத்து நடந்த உடனே ஜீப்பில் இருந்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூவரும், அந்த இடத்திற்கு உடனடியாக வந்த மற்றொரு சொகுசு காரில் ஏறி அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். பலத்த காயமடைந்த சந்தோஷ் சிங் சவுகான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பண்டிகைக் காலத்தில் கணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜீப்பை ஓட்டி வந்த இளம்பெண், ஓட்டுநர் பயிற்சி பெற்று வந்தபோது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய ஜீப்பைக் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், அங்கிருந்து மற்றொரு காரில் தப்பிச் சென்ற 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
