தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த கார்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்!
சிவகங்கை மாவட்டம் புளியால் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று எதிர்பாராத விதமாக பயங்கர விபத்து ஒன்று நிகழந்துள்ளது. சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த கார் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையோரம் இருந்த தடுப்புக் கட்டையின் மீது மோதி தலைகுப்புறக் கவிழ்ந்து தொங்கியது. இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரைக்குடியைச் சேர்ந்த செந்தில் (27) என்பவர் தனது காரில் மேற்கண்ட தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டிருந்தார். புளியால் பகுதிக்கு அருகில் கார் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டைத் முழுமையாக இழந்துள்ளது. இதனால் நிலைதடுமாறிய கார், சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த காங்கிரீட் தடுப்புக் கட்டையின் மீது பலமாக மோதி அப்படியே தலைகுப்புறக் கவிழ்ந்து சாலையோரத்தில் தொங்கியபடி நின்றது.

கார் கவிழ்ந்த வேகத்தைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் யாரும் பிழைக்க மாட்டார்கள் என்றே அஞ்சியுள்ளனர். இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இந்த கோர விபத்தில் காரைக்குடியைச் சேர்ந்த ஓட்டுநர் செந்தில் எந்தவிதமான காயங்களும் இன்றி சிறு கீறல் கூட இல்லாமல் உயிர் தப்பினார். காருக்குள் இருந்த ஏர்பேக்குகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் சரியாகச் செயல்பட்டதே அவர் உயிர் தப்பிக்க முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் புளியால் பகுதிக்குப் போக்குவரத்து மற்றும் ரோந்துப் பிரிவு காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்தனர். தலைகுப்புறக் கவிழ்ந்து கிடந்த காரை மீட்கும் பணியில் ஈடுபட்டதுடன், விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேகமா அல்லது ஓட்டுநருக்குத் தூக்கம் சொக்கியதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் தவிர்க்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
