தாம்பரம் - மதுரவாயல் பைபாஸில் சீறிப் பாய்ந்த கார்... தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து - கல்லூரி மாணவன் பலி!
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறி இயக்கப்படும் அதிவேக வாகனங்களால் தொடர் விபத்துகளும் விலைமதிப்பற்ற உயிர்ப் பலிகளும் அரங்கேறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் அதிவேகமாக சென்றுக் கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், 12-ம் வகுப்பு பயின்று வந்த 17 வயது மாணவன் நரேன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் முக்கியச் சாலையான தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் சலைத் ராஜ் என்பவர் காரில் சென்றுக் கொண்டிருந்தார். அவருடன் நண்பர்களான நரேன், அரவிந்த் கேசவ் மற்றும் எபேந்திரன் ஆகிய மேலும் 3 மாணவர்களும் காரில் உடன் பயணம் செய்துள்ளனர். இவர்களது கார் பைபாஸ் சாலையில் அதிவேகத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியுள்ளது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாகச் சாலையின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த வலுவான இரும்புத் தடுப்பு வேலியில் கார் பயங்கரமாக மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த மாணவர்களில் 17 வயது மாணவன் நரேன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்ற 3 மாணவர்களும் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இளம் வயதில் வாகனங்களை இயக்குவது மற்றும் நண்பர்களுடன் செய்யும் சாகசங்கள் சில நேரங்களில் இது போன்ற ஈடுசெய்ய முடியாத பெருஞ்சோகத்தில் கொண்டு போய் முடிந்து விடுகிறது. இச்சம்பவம் உணர்த்தும் பாடம் குறித்துப் பெற்றோர்களும் இளைஞர்களும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:
18 வயது பூர்த்தியடையாத, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறார்களின் கைகளில் கார்களையோ அல்லது இருசக்கர வாகனங்களையோ இயக்குவதற்குக் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் நடமாட்டத்தைக் கண்காணிப்பதில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
பைபாஸ் மற்றும் விரைவுச் சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறிச் செல்வது வாகனத்தின் கட்டுப்பாட்டை எளிதில் இழக்கச் செய்யும். "வேகத்தைக் குறைப்போம்; உயிரைக் காப்போம்" என்ற விதியை ஓட்டுநர்கள் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். காரில் பயணிக்கும் முன் மற்றும் பின் இருக்கைகளில் அமரும் அனைவரும் கட்டாயம் 'சீட் பெல்ட்' அணிய வேண்டும். விபத்து காலங்களில் இது உயிரைக் காக்கும் மிக முக்கியமான கேடயமாகச் செயல்படுகிறது.
