திருவிழாக் கூட்டத்திற்குள் கார் புகுந்து மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
சிலி நாட்டின் கடலோர நகரான வினா டெல் மார் நகரில் கவுபோலிகன் என்ற புகழ்பெற்ற வீதித் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது. உள்ளூர் திருவிழாவான இதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து மகிழ்ச்சியுடன் அங்கே கூடியிருந்தனர். விடுமுறை நாளான அன்று பொழுதுபோக்கிற்காகச் சிறுவர் சிறுமிகள், பெண்கள் எனப் பலரும் அங்கே திரண்டிருந்தனர்.
அந்தச் சமயத்தில் கடற்படை வீரர் ஒருவர் ஓட்டி வந்த கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்து மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. அங்கிருந்த தற்காலிகக் கடைகளையும் நொறுக்கித் தள்ளியபடி அந்த வாகனம் வேகமாகச் சென்றது. இந்த விபத்தில் சிக்கிச் சம்பவ இடத்திலேயே 6 பேர் தங்களின் உயிரைப் பரிதாபமாக இழந்தனர்.
மேலும் 2 குழந்தைகள் உட்படப் பலத்த காயமடைந்த 7 பேரை மீட்புக் குழுவினர் மீட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய கடற்படை வீரரின் காரைப் பொதுமக்கள் சூழ்ந்து கட்டைகளால் அடித்துத் தகர்த்தனர். உள்ளூர் போலீசார் அந்த வீரரைக் கைது செய்து, விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
