திருச்சி டூ கோவை... 2.5 மணி நேரத்தில் பறந்த ஆம்புலன்ஸ்... பிறந்து 7 நாட்களேயான குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை!
திருச்சியில் இருந்து கோவைக்கு வெறும் இரண்டரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்ட பிறந்து 7 நாட்களே ஆன குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாதம் பிரசவ சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 27ம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து குழந்தையின் உடல் நிலையை மருத்துவர்கள் பரிசோதித்த போது, அவருக்கு இருதயத்தில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, கோவை ஆவாரம்பாளையம் பகுதியி்ல் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து இரண்டரை மணி நேரத்தில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை ஆம்புலன்ஸ் மூலமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதற்காக காவல்துறையினரின் உதவியும் கோரப்பட்டது.
காவல்துறையினர், ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் விரைவாக வருவதற்காக ‘கிரீன் காரிடர்’ திட்டத்தின் கீழ் நெரிசலற்ற போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். அதைத் தொடர்ந்து குழந்தை மற்றும் குழந்தையின் பெற்றோர், மருத்துவப் பணியாளர்களுடன் ஆம்புலன்ஸ் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து இன்று (செப்.4) மதியம் 1 மணிக்கு புறப்பட்டது. ஆம்புலன்ஸை ஒட்டுநர் அஸ்வின் ஓட்டினார். ஆம்புலன்ஸ் வாகனத்துடன் போலீஸ் வாகனமும் வந்தது.
தொடர்ந்து இரண்டரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து குழந்தைக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது. குழந்தையை விரைவாக ஆம்புலன்ஸில் அழைத்து வந்த திருச்சியைச் சேர்ந்த ஓட்டுநர் அஸ்வினை மருத்துவர்கள், காவல்துறையினர் பாராட்டினர்.