நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள்... திருவாரூரில் கோர விபத்து - குழந்தை உட்பட 10 பேர் படுகாயம்!

 
கார் விபத்து

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நிகழ்ந்த கோர கார் விபத்தில் 3 வயது குழந்தை உள்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தஞ்சாவூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற காரும், நாகப்பட்டினத்தில் இருந்து அம்மையப்பன் கிராமத்தை நோக்கி வந்த மற்றொரு காரும் திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் 3 வயது குழந்தை உட்பட மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர். விபத்தைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, விபத்து குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.