தமிழகத்தில் அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் 2 நாள் வேலைநிறுத்தத்தால் ரூ.50 கோடி இழப்பு!
காகித விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரிச்சுமையைக் குறைக்க வலியுறுத்தி, தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று அக்டோபர் 9 மற்றும் இன்று அக்டோபர் 10 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தம் இன்றுடன் நிறைவடைகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அட்டைப்பெட்டி தயாரிப்புக்குத் தேவைப்படும் முதன்மையான 'கிராப்ட் காகிதத்தின்' விலை 8 முறை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு டன் காகிதத்தின் விலை ரூ.8,000 வரை உயர்ந்துள்ளது உற்பத்தியாளர்களைப் பெருமளவில் பாதித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகம் முழுவதிலும் உள்ள சுமார் 2,500 அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறுவனங்களின் பணிகள் முற்றிலும் முடங்கின. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் தொழில்துறையில் சுமார் ரூ.50 கோடிக்கும் அதிகமாக உற்பத்தி மற்றும் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
