திருப்பத்தூரில் தவெக வெற்றிப்பெற்றதை எதிர்த்து வழக்கு... தேர்தல் அதிகாரி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், த.வெ.க வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் பெரியகருப்பன் 83,364 வாக்குகள் பெற்று, வெறும் 1 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்தத் தேர்தல் முடிவில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கினை இன்று விசாரித்த நீதிபதிகள் விக்டோரியா கவுரி மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு முக்கியக் கேள்விகளை முன்வைத்தது. குறிப்பாக, சிவகங்கை மாவட்ட தபால் வாக்குகள் வேலூர் அருகே உள்ள திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மாறியதாக எழுந்த புகார் குறித்து இதுவரை ஏன் பதிலளிக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்தக் குளறுபடிகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஒத்தி வைத்தது. ஒரு வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க வெற்றி பெற்றுள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் முடிவு சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்பதில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
