கள் இறக்கியதாக துப்பாக்கிச் சூடு நடத்திய 3 போலீசார் மீது வழக்குப்பதிவு!

 
தென்காசி எஸ்.ஐ. கள் தென்காசி எஸ்.ஐ. கள்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் கிராமத்தில், கள் இறக்குவது தொடர்பான சோதனையின் போது பனைத் தொழிலாளி ஒருவர் போலீசாரால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருதம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாகக் கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா சாதாரண உடையில் சோதனைக்குச் சென்றுள்ளார்.

தென்காசி

தொழிலாளி மணிகண்டன் (35) என்பவரது வீட்டில் சோதனை செய்த போது எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து, அவர் தொழில் செய்யும் பனை மரத்திற்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது, அங்கு கள் இல்லை என மணிகண்டன் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறியதில், இருவரும் தரையில் விழுந்து சண்டையிட்டுள்ளனர். ஆத்திரமடைந்த மணிகண்டன் அங்கிருந்த பனை மட்டையால் எஸ்.ஐ-யை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் நிலைகுலைந்த எஸ்.ஐ இசக்கிராஜா, தற்காப்புக்காகத் தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து மணிகண்டனை நோக்கிச் சுட்டார். இதில் மணிகண்டன் படுகாயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். துப்பாக்கி குண்டு பாய்ந்த மணிகண்டன் மற்றும் பனை மட்டையால் அடிபட்ட எஸ்.ஐ இசக்கிராஜா ஆகிய இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள் தென்காசி

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பனைத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடலாம் என்ற அச்சம் நிலவிய நிலையில், உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்திய எஸ்.ஐ இசக்கிராஜா உட்பட 3 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்காப்புக்காகச் சுட்டதாகப் போலீசார் தரப்பில் கூறப்பட்டாலும், விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது குறித்துத் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் மருதம்புத்தூர் கிராமத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.