கோவில் பூஜையை அவமதித்ததாக புகார் - நடிகர் ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில் பூஜையை மாந்திரீகம் செய்வது போல் சித்தரித்துச் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக எழுந்த புகாரின் பேரில், பிரபல இணையவாசி மற்றும் நடிகரான ஜி.பி.முத்து மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் அமைந்துள்ள உச்சினிமகாளி அம்பாள் - ஸ்ரீபட்டறை அம்பாள் கோவிலில் கட்டுமானப் பணிகள் தொடர்பான சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்தச் சிறப்பு பூஜையை மாந்திரீகம் செய்வது போல் தவறாகச் சித்தரித்து, ஜி.பி.முத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோவாகப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. கோவில் கமிட்டி தலைவர் பாலகிருஷ்ணன், இந்த வீடியோ மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலும் இருப்பதாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் நடிகர் ஜி.பி.முத்து மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
