பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது போலீசார் வழக்குப்பதிவு: திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக இன்ஸ்டா பிரபலம் புகார்!

 
முத்துக்குமரன்

 

பேச்சுப் போட்டிகள் மூலம் பிரபலமாகி, பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற முத்துக்குமரன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பிரபலமான வாஹிதா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முத்துக்குமரன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாக வாஹிதா ஏற்கனவே சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதனால் ஏற்பட்ட கடும் மன உளைச்சலில் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்த முத்துக்குமரன், தங்கள் இருவருக்கும் இடையே காதல் உறவு எதுவும் இல்லை என்றும், தன் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, வாஹிதா காவல்துறையில் நேரடியாகப் புகார் மனு அளித்தார். அந்தப் புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், தற்போது பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது பிஎன்எஸ் 69-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமண ஆசை காட்டி மோசடி செய்வது தொடர்பான இந்தப் பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் பிரபலம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த விவகாரம் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.