சொத்து விவரங்களை மறைத்ததாக சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் மீது வழக்குப்பதிவு!

 
சி.வி.சண்முகம் வானதி சீனிவாசன் சி.வி.சண்முகம் வானதி சீனிவாசன்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில், அதிமுக மற்றும் பாஜக-வின் முக்கியத் தலைவர்கள் தங்களது உண்மையான சொத்து மதிப்பை மறைத்துள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தேர்தல் வேட்புமனுக்களுடன் தாக்கல் செய்யப்படும் உறுதிமொழிப் பத்திரங்களில், வேட்பாளர்கள் தங்களின் சொத்து மற்றும் கடன் விவரங்களைத் துல்லியமாகக் குறிப்பிட வேண்டும் என்பது விதி. ஆனால், சில முக்கிய வேட்பாளர்கள் இதனை முறையாகச் செய்யவில்லை என வாக்காளர்கள் சிலர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

வானதி சீனிவாசன்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் மீது இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவர்களது தற்போதைய சொத்து மதிப்பிற்கும், உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடுகள் இருப்பதாகவும், பல சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

சி.வி.சண்முகம்

இந்த முறைகேடுகள் குறித்து வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே, இதேபோன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சொத்து விவரங்கள் குறித்துத் தொடரப்பட்ட வழக்கில், வரும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மீதும் இதே போன்ற வழக்குகள் தொடரப்பட்டிருப்பது தேர்தல் களத்தில் அனல் பறக்கும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.