“பிரியாணி சமைக்கும் விநாயகர்” - ப்ளக்ஸ் பேனர் வைத்த ஓட்டல் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு - நெல்லையில் சர்ச்சை!

 
பிரியாணி விநாயகர்

நெல்லை மாவட்டம் வி.எம்.சத்திரத்தில் உள்ள அசைவ உணவகம் ஒன்றில் விநாயகர் சதுர்த்தியைக் குறிக்கும் வகையில் வைக்கப்பட்ட விளம்பரப் பேனர் பொதுமக்களிடையே சர்ச்சையையும் புகாரையும் ஏற்படுத்தியதை அடுத்து, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வி.எம்.சத்திரத்தில் இயங்கி வரும் அந்த அசைவ உணவகத்தில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டுச் சலுகை விலையில் பிரியாணி வழங்கப்படும் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டது. அதில் விநாயகர் உருவம் பிரியாணி சமைப்பது போன்ற சித்திரம் இடம்பெற்றிருந்தது.

விநாயகர் சதுர்த்தி நாளில் இது போன்ற படத்துடன் விளம்பரம் வெளியிடப்பட்டது இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கண்டனங்கள் எழுந்தன.

இந்த புகாரைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட போலீசார், உடனடியாக அந்த சர்ச்சைக்குரிய விளம்பரப் பேனரை அங்கிருந்து அகற்றினர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சம்மந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.