தவெக தலைவர் விஜய், புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு... தொண்டர்கள் அதிர்ச்சி!
சென்னை தி.நகர் பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தென் சென்னை மாவட்டச் செயலாளர் அப்புனு ஆகியோர் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேற்று தென் சென்னைக்கு உட்பட்ட தி.நகர், எழும்பூர் மற்றும் ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளில் விஜய் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது குறிப்பிட்ட இடத்தில் கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், விதிகளை மீறி 'ரோடு ஷோ' நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நந்தனம் மெட்ரோ முதல் தி.நகரின் முக்கிய வீதிகள் வரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பித்தது.
அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் கூட்டத்தைக் கூட்டி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகத் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்தோஷ்குமார் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், சட்டவிரோதமாகக் கூடுதல், அரசு உத்தரவை மீறுதல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே காவல்துறையின் கெடுபிடிகளால் சில இடங்களில் பரப்புரை ரத்து செய்யப்பட்ட நிலையில், மக்களின் தன்னெழுச்சியான வருகையைத் தங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றும், திட்டமிட்டபடி அமைதியான முறையிலேயே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தவெக தரப்பில் கூறப்படுகிறது.
