அரசுப் பள்ளி மாணவன் மீது சாதி வெறித் தாக்குதல் - நெல்லை நாங்குநேரி அருகே மீண்டும் கொடூரம்!

 
நாங்குநேரி சாதி வெறித்தாக்குதல்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பள்ளி மாணவன் மீது சக மாணவர்கள் சாதி வெறியுடன் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாங்குநேரி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வேலாண்டி என்பவரின் மகன் பிரவீன். இவர் மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருடன் படிக்கும் மேல அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொன் கார்த்திக் என்ற மாணவர், சக மாணவர்களிடம் சாதி ஆதிக்க மனோபாவத்துடன் நடந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் பிரவீனைத் தொடர்ந்து சாதி ரீதியாகப் பேசி துன்புறுத்தியும், கையில் கிடைக்கும் பொருள்களால் குத்திக் காயப்படுத்தியும் மிரட்டி வந்துள்ளார்.

நாங்குநேரி அருகே மீண்டும் கொடூரம்:

நேற்று முன் தினம் ஜூலை 27ம் தேதி பள்ளி வளாகத்தில் பிரவீன் மரத்தடியில் அமர்ந்திருந்தபோது, இசக்கிமுத்து என்ற மாணவர் மூலம் பொன் கார்த்திக் அவரை அழைத்துள்ளார். அங்குச் சென்ற பிரவீனை, பொன் கார்த்திக் மிக அநாகரிகமான வார்த்தைகளாலும் சாதிப் பெயராலும் திட்டி, உடைந்த பெஞ்ச் கட்டையால் தலையில் ஓங்கி மாறி மாறித் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த தலைக் காயமடைந்த பிரவீன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். தாக்குதலில் ஈடுபட்ட பொன் கார்த்திக் மற்றும் இசக்கிமுத்து ஆகிய இருவரும் உடனடியாகப் பள்ளியின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்துத் தப்பி ஓடினர். பிரவீன் காயமடைந்து விழுந்ததைக் கண்ட பள்ளி நிர்வாகம், அவரை உடனடியாக மீட்டு மூலக்கரைப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காகச் சேர்த்தது. அதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவம் குறித்துப் தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மாணவர்களைத் தேடி வருவதோடு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.